Wednesday, 25 September 2013

காசிரங்கா தேசியப்பூங்கா - சுற்றுலாத்தலங்கள்!

                     காசிரங்கா தேசியப்பூங்கா
ந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.


காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

 இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப் பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும் உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும் 90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள் மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம்.

மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)





ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.

அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.

மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.

'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.

எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.

உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.

'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.

பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,

மரம் அவனை விளையாட அழைத்தது.

'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.

மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.

அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.

மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.

மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.

எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.

மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.

சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.

'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.

மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்

பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.

நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.